Wednesday, February 1, 2017

இதுவரைகாலமும் சிங்களவர்களின் பேரம்பேசல்கள் வென்றிருக்கலாம். இனிமேல் தமிழர்களின் பேரம்பேசல் வெல்ல இருக்கிறது..! BY JM

ஈழத்தமிழர் தேசிய இனம் குறித்த உலகளாவிய வல்லாதிக்கங்களினதும் பிராந்திய வல்லாதிக்கங்களினதும் இடைத்தாக்கங்கள் ஆழமானவை. உலகளாவிய வல்லாதிக்கப் போட்டியில் அமெரிக்காவும் சீனாவும் இரு தரப்புக்களாக ஈடுபட்டிருக்கின்றன என்பது ஐயந்திரிபற்ற விவகாரம். இலங்கைத்தீவைப்பொறுத்தவரை, உலகளாவிய அமெரிக்க - சீன போட்டி ஒருபுறமும் பிராந்திய அளவிலான இந்திய - சீனா போட்டி இன்னொருபுறமுமாக, பின்னிப்பிணைந்த நிலை காணப்படுகிறது. தமக்கிடையே உலகளாவிய, பிராந்திய நலன்கள் அடிப்படையிலோன நுட்பமான வேறுபாடுகள் இருப்பினும் அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைத் தீவு தொடர்பாக ஒத்திசைந்துபோகும் அணுகுமுறையைப் பலவருடங்களாகக் கைக்கொண்டிருக்கின்றன. அ) போரின் போது: அமெரிக்காவினதும் சீனாவினதும் நேரடி, மறைமுக உதவி மற்றும் பேரம்பேசல் தொடர்பான சிக்கல் இலங்கைக்கு இருக்கவில்லை என்பதும், ஆனால், இந்தியாவின் ஆதரவில்லாமல் இன அழிப்புப் போரில் வென்றிருக்க முடியாது என்ற என்ற ஆழமான உண்மையை கோத்தபாய ராஜபக்ச தனது இந்து சமுத்திரம் தொடர்பான இராணுவ மகா நாடுகளில் குறிப்பிட்டு வந்திருக்கிறார். இதே கருத்தை கருத்தை ரஜபக்ச சகோதரர்கள் மாத்திரமல்ல அமெரிக்க அணியைச் சார்ந்த சிங்கள பயங்கரவாத நிபுணர்களும் முன்வைத்துள்ளார்கள். ஆ) போரின் பின்னால்: இந்தியாவுன் ஒத்திசைந்து போனாலும் நேரடியான தலையீட்டை அதிக அளவில் அமெரிக்காவே வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்குக் குறிப்பான உதாரணம் ஜெனீவாவில் 2010 தொடக்கம் 2016 வரை நடைபெற்ற மனித உரிமைகளைக் களமாக்கி இலங்கையில் தனக்குச் சார்பான போக்கைக் கொண்டுவருதல் என்பது. அமெரிக்காவே நேரடியாக தீர்மானங்களைக் கொண்டுவந்து சர்வதேச விசாரணையை ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வழங்காத வகையிலும் தனக்குரிய இலங்கையுடனான பேரம்பேசலுக்குமாகக் கையாண்டது. இ) ஒபாமா-கிளின்ரன் மென்வலு அணுகுமுறை: ஒபாமா-கிளின்ரன் இலங்கை தொடர்பாக கையாண்ட மென்போக்கு அணுகுமுறை சிங்கள ஒற்றையாட்சி பௌத்த பேரினவாத இன அழிப்பு அரசுக்கு பல வகைகளிலும் சாதகமாக அமைந்திருந்தது. ஈழத்தமிழர்களின் காயங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா சார்ந்த, மற்றும் அமெரிக்க-இந்திய பின்னிப்பிணைந்த போக்குகள் தொடர்பான, ஒரு தலைப்பட்சமாக ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட அரசியல் ஈழத்தமிழர்களின் நலனுக்கு குந்தகமாக இருந்துவந்துள்ளது. ஆனால், ஈழத்தமிழர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் ‘பயன்படுத்தப்படும் வட்டத்திற்குள்’ மாத்திரம் தாமாக மாட்டிக்கொண்டவர்களாகவே வைத்துக் கையாளப்பட்டார்கள். வல்லாதிக்கங்களின் நலன்களுக்குப் பலிக்கடா ஆகாதபடி தமது அரசியலை முன்னெடுப்பதற்கான சுயமாக ஒரு நிலைப்பாட்டை காத்திரமான முறையில் அவர்கள் எடுத்தாளவில்லை. அனாலும் முழுவதுமாக தமிழர்கள் பறி போய் விடவும் இல்லை. ஒற்றுமை இன்மை என்பது தமிழர்களை ஒருவகையில் முழுமையாக பலி போய்விடாமல் காப்பற்றுவத்ற்கும் உதவியது. இதன் காரணமாகத்தான், புலம் பெயர், தமிழக உருவாகிய எழுச்சியும் இடைத்தாக்காமும் ஈழத்தமிழர் கோரிக்கை விடயத்தில் ஒரு தெளிவான நிலையைத் தோற்றுவித்தது. குறிப்பாக, ஐ. நா வில் பொதுவாக்கெடுப்பு, இன அழிப்பு தொடர்பான சர்வதேச விசாரணை என்பவை தொடர்பில் எழுந்த தீர்மானங்களும் செயற்பாடுகளும் இந்த வகைப்பட்டவையே. இந்த படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு, தற்போது உருவாகியுள்ள சர்வதேச சூழலில் உள்ள மாற்றங்களையும் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர் இனிமேல் மேன் மேலும் தமது நலனை முன் நிஅலைஇப்படுத்திச் சிந்திக்கும் தன்மை உடையவர்களாக மேலும் உறுதி பெற்றுச் செயற்படவேண்டும். ஈ) எதிர்காலம்: சுயமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் தயாராகுங்கள் வல்லாதிக்கங்களின் நலன்களுக்கு அப்பால் ஈழத்தமிழரின் தேசிய நலனை அடிப்படையாக வைத்துச் சிந்திக்கும் போக்கு இல்லாதவரை ஈழத்தமிழரின் தவறுகள் அதல பாதாளத் தவறுகளாகவே அமைந்திருக்கும். ஆகவே, முதலில், ஈழத்தமிழர்கள் மற்றைய சக்திகளின் நலன்களுடன் தமது நலனையும் இணைத்துச் செயற்படுவது என்ற வரையறைக்குள் வேலிபோட்டு நின்று கொண்டு, வேறு சக்திகளின் நலன்சார்ந்த சிந்தனைக்கு இணங்கச் சிந்திப்பது தான் 'இராஜதந்திரம்' என்று நினைக்கும் கோழைத்தனமான சிந்தனைச் சிறைக்குள் இருந்து விடுபடவேண்டும். கோழைத்தனத்துக்கு முதலில் முடிவு கட்டுங்கள். இந்த முதல் படியைத் தாண்டினால், அடுத்த படிகள் தாமாக அமைந்து வரும். 1)சுயமாகச் சிந்திக்கச் சந்தர்ப்பம்: • ஈழத்தமிழர் நலனை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பது எப்படி? • தமிழக - ஈழத்தமிழர் உறவுநிலையை எவ்வாறு வலுப்படுத்தலாம் (கச்சதீவு, கடல்வளம் குறித்த முரண்பாட்டு நிலை போன்றவற்றை உள்ளடக்காமல் இதை வகுக்கமுடியாது)? • இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு ஈழத்தமிழர் சுயமாக முன்வைக்கும் நிலைப்பாடுகள் எவை? 2) சுயமாகச் சிந்திக்கச் சில ஆலோசனைகள்: - சர்வதேச நீதிப் பொறிமுறை - இனப் பிரச்சனைத் தீர்வு தொடர்பான அடிப்படைச் சமன்பாடு சர்வதேச நீதிப் பொறிமுறை தொடர்பாக: இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணையை இந்த சக்திகளில் யார் கொண்டுவரத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அவ்வாறு அவர்கள் தயாராக இல்லாதவிடத்து, தமிழர் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதை அவர்களுக்கு எவ்வாறு உணர்த்துவது என்பது தொடர்பான நிலைப்பாடும் முக்கியமானது. இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக: தனிநாடு என்பதற்கான நியாயப்பாட்டைக் கைவிடும்படி தமிழர்களை நிர்ப்பந்திக்காமல் எவ்வாறு ஒரு சமஸ்டித் தீர்வை சர்வதேச சக்திகளை முன்வைக்கச் செய்யலாம் என்பது குறித்த ஒரு சமன்பாட்டை இந்தச் சக்திகளுக்கு வலியுறுத்துவது. இதற்குச் சர்வதேச சக்திகள் தமது நலன்களையும் உள்ளடக்கி ஈழத்தமிழர்களுக்குச் சார்பான நிலைலையைக் கைக்கொள்ளத் தவறினால் உலகத் தமிழர் சமூகம் எவ்வாறு சுயாதீனமாகச் செயற்படுவது குறித்து தெளிவாக இருக்கிறது என்பதும் இந்தச் சக்திகளுக்குச் சொல்லப்படவேண்டும். இதுவரைகாலமும் சிங்களவர்களின் பேரம்பேசல்கள் வென்றிருக்கலாம். இனிமேல் தமிழர்களின் பேரம்பேசல் வெல்ல இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளும் திறமை எந்த வல்லாதிக்கத்துக்கு இருக்கிறது என்பதற்கான பரிசோதனை இப்போது ஆரம்பமாகிறது.

No comments:

Post a Comment